ரேஸின் போது விபத்தில் சிக்கிய அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்றிருக்கும் நிலையில் அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அஜித் பயணித்த கார் விபத்தில் சிக்கிய வதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கும் நிலையில் அவர் எந்த காயமும் இன்றி தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார் தற்போது அவர் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. தற்போது அந்த படத்தின் அப்டேட் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிப்பு ஒருபுறம் இருக்க கார் ரேசிலும் நடிகர் அஜித் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆரம்பத்தில் இருந்தே அவர் கார் மற்றும் பைக் ரேஸில் பங்கேற்று வந்திருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற மிச்சலின் 24 ஹெச் துபாய் கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் பங்கேற்றார்.

இந்த நிலையில் துபாயில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது அடுத்த பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது அஜித்குமார் ரேசிங் க்ளப் அணி. ஸ்பெயின் நாட்டின் பேலன்சிய மாகாணத்தில் நடைபெற்ற கார் ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் அஜித்குமார் கலந்து கொண்டார். கிளப் டிவிஷன் முதல் ரேஸில் 14வது இடத்தை அவர் பிடித்து அசத்தியிருக்கிறார். இதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சென்ற கார் விபத்தில் சிக்கியதை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

போட்டியின் போது திருப்பத்தில் திரும்ப முயன்ற காரின் பின்பக்கமாக நடிகர் அஜித்குமாரின் கார் மோதி இரண்டு மூன்று சுற்று உருண்டு சென்று நின்றது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அஜித்குமாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. அஜித் காயம் இன்றி உயிர்த்தப்பினாலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.