ஒவ்வொரு படமும் எனக்கு மிகவும் முக்கியம். காரணம், நான் தோற்றுப்போனால் எனக்காக படம் தயாரிக்கவோ, என்னுடைய கெரியரை மறுமுறை மேல் மேல் கொண்டு வரவோ யாரும் இல்லை என்று பூஜா ஹேக்டே கூறியுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தன. இந்த நிலையில், அவர் ராசியில்லாத நடிகை என்று திரைவட்டாரத்தில் பேச்சு உலாவியதாக சொல்லப்பட்டது. இதனையடுத்துதான் இவரும் நடிகர் ஹாஹித் கபூரும் இணைந்து நடித்து அண்மையில் வெளியான தேவா திரைப்படம் வெற்றிப்பெற்றது. இது பூஜாவுக்கு பாலிவுட்டில் கம்பேக் படமாக பார்க்கப்பட்ட நிலையில், சூர்யாவின் ரெட்ரோ, ரஜினியின் கூலி, விஜயின் ஜனநாயகன் உள்ளிட்ட படங்களில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் கெரியரை நிலைநிறுத்த வாய்ப்புகள் கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கும் பூஜா ஹெக்டே, இந்த வாய்ப்புகள் குறித்து தனியார் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
இது குறித்து பூஜா ஹெக்டே கூறியுள்ளதாவது:-
நீங்கள் வாரிசு அந்தஸ்து மூலமாக திரைத்துறைக்கு வராத போது, ரசிகர்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறார்களா இல்லையா? என்பது மட்டுமல்ல, திரைத்துறை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறதா இல்லையா என்பதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒவ்வொரு படமும் எனக்கு மிகவும் முக்கியம். காரணம், நான் தோற்றுப்போனால் எனக்காக படம் தயாரிக்கவோ, என்னுடைய கெரியரை மறுமுறை மேல் மேல் கொண்டு வரவோ யாரும் இல்லை. ஆகையால் ஒவ்வொரு திரைப்படமும் எனக்கு இன்றியமையாத ஒன்றாகும். என்னுடைய கெரியரை நான் சுறுசுறுப்பாக வேலை செய்வதின் வாயிலாகதான் கட்டமைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு திரைப்படமும் உங்களை உருவாக்கலாம் அல்லது நொறுக்கலாம். ஒரு திரைப்படம் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால், உங்களது அடுத்த வாய்ப்பை பாதுகாக்க நீங்கள் உழைக்க வேண்டும். ஆகையால் நான் என்னுடைய வேலையை சாதரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.