தேவையில்லாமல் நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை கயாடு லோகர் கூறியுள்ளார்.
கோமாளி, லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அனுபமா பரமேசுவரன், ஜார்ஜ் மரியன், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலர் நடித்திருந்தார். இப்படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. கல்லூரி மாணவர்களை கவரும் வகையில் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். தியேட்டரில் வசூலை அள்ளி வரும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், கயாடு லோகர் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார்கள். அப்போது அவர்களிடம் படம் குறித்து பலவிஷயங்கள் கேட்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளர், பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படமான, லவ் டுடே படத்தில் வருவது போல இருவரும் செல்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அப்போது பிரதீப், கயாடு போனில் கயாடு லோகர் தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை என்று மீம்ஸ் கிரியேட் செய்திருப்பதை பார்த்து கலாய்த்தார். உங்களுக்கு நீங்களே மீம்ஸ் கிரியேட் செய்து கொள்வீர்களா? நீங்க தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகையா என்று காமெடியாக கிண்டலடித்து இருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வைரலான நிலையில், பிரதீப்பிற்கு தலைகணம் வந்துவிட்டது, இரண்டு படத்தில தான் நடித்து இருக்கிறீர்கள் அதற்குள் சாதித்தது போல பேச வேண்டாம் என்றும் ஒரு பேட்டியில் நடிகையிடம் எப்படி நடந்து கொள்வது என்று கூடவா உங்களுக்கு தெரியாது என பலரும் பிரதீப்பை கடுமையாக விமர்சித்தனர்.
இதை கேள்விப்பட்ட டிராகன் பட நடிகை கயாடு லோகர், “நாங்கள் அளித்த பேட்டி தொடர்பான விமர்சன வீடியோக்களை இணையத்தில் பார்த்து வேதனை அடைந்தேன். அந்த பேட்டியில் நீங்கள் பார்த்த அனைத்துமே காமெடிக்காக செய்தது. அந்த பேட்டியின் சுவாரசியத்தை அதிகமாக்க நானும் பிரதீப்பும் முன்பே அதைப்பற்றி பேசி அனைவரையும் சிரிக்க வைக்க பிளான் பண்ண ஸ்கிரிப்ட், இதனால் நான் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால், தேவையில்லாமல் நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம், அது ஒரு நகைச்சுவையான பேட்டி, அதைப்பார்த்து சிரித்து மகிழ்ச்சி அடையுங்கள் என்னை ஆதரித்தவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கயாடு லோகர் கூறியுள்ளார்.