‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காலில் காயம்!

மைசூரில் நடைபெற்ற ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி முடித்தது ‘சர்தார் 2’ படக்குழு. அதனைத் தொடர்ந்து மைசூரில் ஒருசில காட்சிகளை படமாக்க சென்றார்கள். அங்கு மார்ச் 7-ம் தேதி வரை படப்பிடிப்பு திட்டமிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பில் சிறு விபத்தில் சிக்கினார் கார்த்தி. இந்த விபத்தில் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

உடனடியாக கார்த்திக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பெரியளவில் காயம் ஏற்பட்டவில்லை எனவும், ஆனால் ஒரு வாரம் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் கார்த்திக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் முழுமையாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஜ்சுரமுடு, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.