வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘அரண்மனை 4’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

நீண்ட வருடங்கள் கழித்து இப்படத்தில் சுந்தர்.சி – வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. பல்வேறு விநியோகஸ்தர்கள் இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்து தயாரித்திருந்தாலும், ‘கேங்கர்ஸ்’ சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும் கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கேங்கர்ஸ்’ பணிகளை முடித்த கையோடு நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பணிகளை தொடங்க உள்ளார்.