வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வடிவேலு இன்று ஆஜர் ஆனார்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர். குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு.
தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். ஒருவழியாக பஞ்சாயத்துக்கள் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என வரிசையாக நடித்த அவர்; இப்போது மாரீசன், கேங்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.
இதற்கிடையே வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்கு நிலவிவருகிறது. பல பேட்டிகளில் வடிவேலுவை சிங்கமுத்து சகட்டுமேனிக்கு விளாசிவருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் வடிவேலுவோ பெரிதாக ரியாக்ட் எதுவும் செய்துகொண்டதில்லை. ஆனால் சிங்கமுத்து தொடர்ந்து அப்படி பேசிவந்ததால் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் தன்னுடைய மனுவில், ‘சிங்கமுத்து தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறாக பேசிவருகிறார். எனவே அவர் தனக்கு ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அதனையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக வடிவேலு ஆஜரானார்.