பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் தனக்கு சொந்தமாக இருந்த ஆடம்பர சொகுசு குடியிருப்புகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமாகி நடித்தார். இதனைத் தொடர்ந்து இந்தி திரை உலகில் வலம் வந்தார். தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் ஹாலிவுட் உலகிற்கு சென்றார் பிரியங்கா. இதனை தொடர்ந்து அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா மும்பையில் தனக்கு சொந்தமாக இருந்த நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மும்பையின் பிரதான பகுதியான அந்தேரி பகுதியில் இவருக்கு சொந்தமாக இருந்த குடியிருப்புகளை 16.17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக இன்டெக்ஸ் டேப் என்ற தளம் செய்தி வெளியிட்டுள்ளது. லோகந்த்வாலா பகுதியில் இருக்கும் ஓபராய் ஸ்கை கார்டன்சிஸ் என்ற குடியிருப்பில் பிரியங்கா சோப்ரா 4 அடுக்குமாடி குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருந்தார். நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர சொகுசு குடியிருப்புகள் இவை. கடந்த மார்ச் 3ஆம் தேதி இவர் இவற்றை விற்பனை செய்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி 18ஆவது தளத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பை 3.45 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். இது 1075 சதுர அடி பரப்பளவு கொண்டது. 885 சதுர அடி கொண்ட மற்றொரு குடியிருப்பை 2.85 கோடி ரூபாய்க்கு இவர் விற்பனை செய்துள்ளார். 19ஆவது தளத்திலிருந்து 1100 சதுர அடி பரப்பளவிலான அடுக்குமாடி குடியிருப்பை 3.52 கோடிக்கும், 18ஆவது மற்றும் 19ஆவது தளங்களில் சேர்ந்து இருந்த நான்காவது குடியிருப்பை 6.35 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவை பொருத்தவரை 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இதனை எடுத்து அவர் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அண்மையில் இவர் இந்தியாவில் எஸ்எஸ் ராஜமௌலியின் எஸ்எஸ்எம்பி 29 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் இந்திய திரையுலகில் கால் பதிக்க இருக்கிறார். இறுதியாக 2019ஆம் ஆண்டு தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படம் தான் அவர் நடித்த கடைசி இந்திய படமாக இருந்தது. இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். சிடாடெல் சீசன் 2, ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட், தி பிளஃப் ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.