சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டலில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று (மார்ச்.8-ம் தேதி) அரங்கேற்ற உள்ளார். இதையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் தொடங்கி அரசியல் தலைவர்களும், கமல்ஹாசன் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், #IncredibleIlaiyaraaja என்ற ஹேஷ்டேகையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
முன்னதாக லண்டன் புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த இளையராஜா, “சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். ரசிகர்களைப் போல் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை” என்று பெருமிதத்துடன் கூறினார். ‘IncredibleIlaiyaraaja’ என்றும் தனது திறமையை சிலாகித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் அதே வார்த்தையை ஹேஷ்டேகாகப் பதிவிட்டு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.