ரஷ்மிகாவுக்கு பாதுகாப்பு கேட்கும் கொடவா கவுன்சில்!

கொடவா சமூகத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக ரஷ்மிகாவை டார்கெட் செய்வது தவறு. அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என கொடவா தேசிய கவுன்சில் சார்பில் மத்திய, மாநில உள்துறை அமைச்சர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டை சேர்ந்தவர் ரஷ்மிகா மந்தன்னா. இந்நிலையில் கொடவா சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ரஷ்மிகாவை டார்கெட் செய்கிறார்கள் என கொடவா தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொடவா தேசிய கவுன்சிலின் தலைவர் நந்தினார்வந்தா நாச்சப்பா அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஷ்மிகாவுக்கு எதிராக தேவையில்லாத பிரச்சனை செய்யப்படுகிறது. அவரை மனதளவில் டார்ச்சர் செய்கிறார்கள். அரசியல் தொடர்பே இல்லாமல் கடினமாக உழைத்து முன்னேறியவர் ரஷ்மிகா. அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது. கொடவா சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இப்படி பிரச்சனை செய்கிறார்கள்.ரஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய மற்றும் மாநில உள்துறை அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான கானிகா ரஷ்மிகா பற்றி பேசியதை அடுத்தே அவருக்கு பாதுகாப்பு கோரியிருக்கிறார்கள். ரஷ்மிகா பற்றி கானிகா கூறுகையில், கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் கெரியரை துவங்கிய ரஷ்மிகா மந்தன்னா கடந்த ஆண்டு நடந்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மறுத்தார். நாங்கள் அவரை அழைத்தும் வரவில்லை. திரைப்பட விழாவுக்கு அழைக்க ரஷ்மிகாவின் வீட்டிற்கு 10, 12 முறை சென்றும் கூட அவர் வர மறுத்துவிட்டார். என் வீடு ஹைதராபாத்தில் இருக்கிறது. கர்நாடகா எங்கிருக்கிறது என எனக்கு தெரியாது. எனக்கு நேரம் இல்லை. என்னால் வர முடியாது என்றார் ரஷ்மிகா. அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா என்றார்.

இந்நிலையில் ரஷ்மிகாவை சீண்டுவது தொடர்ந்தால் தேசிய மற்றும் சர்வதேச மகளிர் ஆணையங்களில் புகார் அளிக்கப்படும் என கொடவா தேசி கவுன்சில் தலைவர் நாச்சப்பா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கெரியரை பொறுத்தவரை உச்சத்தில் இருக்கிறார் ரஷ்மிகா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விக்கி கௌஷலுடன் சேர்ந்து ரஷ்மிகா நடித்த சாவா பாலிவுட் படம் வெளியாகி 24 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 519 கோடி வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.