நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டீசர் வெளியானது!

எஸ். சசிக்காந்த் இயக்கியுள்ள ‘டெஸ்ட்’ படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரமான குமுதாவை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் தளம் வெளியிட்டது. இந்த டீசரில், நயன்தாரா ஒரு குழந்தையையும், அன்பான வாழ்க்கையையும் எதிர்பார்க்கும் நபராக காட்டப்பட்டிருக்கிறார். அதற்காக அவர் எந்த விலை கொடுத்தும் அடையத் தீர்மானமாக இருப்பதையும் காட்டுகிறது.

டெஸ்ட் படத்தில் நயன்தாராவின் அறிமுக டீசர் கடவுளிடம் வேண்டுவது போல் உள்ளது. அதில், ‘ஒரு கனவு மட்டும் தான்’ என்று தன் பிரார்த்தனையை அவர் தொடங்குகிறார். ‘ஒரு சிறிய வீடு, இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொள்ள ஒரு கணவன், அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை’ என்பது தான் அவள் கடவுள் தனக்கு தரவேண்டும் என விரும்புவது.

டீசரின் படி மாதவன், நயன்தாராவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் எனத் தெரிகிறது. குழந்தைக்காக ஆசைப்படும் குமுதா, இது எவ்வளவு முக்கியம் என்பதை மாதவனிடம் கூறுகிறாள். குமுதா பணிபுரியும் பள்ளியில், அவள் குழந்தைகளின் அம்மா போல் நடந்து கொள்வதாகவும் ஒரு ஆசிரியை மாதிரி நடந்து கொள்ள வேண்டும் எனவும் கண்டிக்கின்றனர். குழந்தை பிறப்பு மேல் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் குமுதா கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை ஆசையுடன் தொடுகிறாள்.

மேலும் அவளது முந்தைய கருச்சிதைவு சிகிச்சை, அவளுக்கு தற்போது கருவுற சிரமத்தை ஏற்படுத்தியது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், அத்தோடு இதுதான் குமுதா கருவுறுவதற்கான கடைசி வாய்ப்பு என்றும் கூறுகின்றனர், இருப்பினும், குமுதா எதையும் பொருட்படுத்தாமல், தனது கனவுகளை அடையத் தீர்மானமாக உள்ளாள் என்பதை டீசர் காட்டுகிறது.

சசிகாந்த் எழுதி இயக்கியுள்ள ‘டெஸ்ட்’ படத்தை அவர் மற்றும் சக்கரவர்த்தி ராமச்சந்திரன் தயாரித்துள்ளனர். இது ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸில் வெளியிடப்படும். டெஸ்ட் படத்தை நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கான அறிமுக டீசரில், நெட்ஃபிளிக்ஸ் குமுதாவின் கதையை ‘கனவு காணத் துணியும், சரணடைய மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சான்று’ என்று விவரித்தது.

தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பேசுகையில், “குமுதாவின் வலிமை அவளது கனவுகளின் எளிமை ஆகியவற்றில் உள்ளது ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடிக்கும் ஒரு காதல். ஆனால் வாழ்க்கை அவளை எதிர்பாராத வழிகளில் சோதிக்கிறது. உண்மையில் முக்கியமானவற்றுக்காக போராட அவளைத் தூண்டுகிறது. அவளது பயணத்தை சித்தரிப்பது மிகவும் உணர்ச்சிவசப்படுத்தும் விஷயமாக இருந்தது. மேலும் பார்வையாளர்கள் அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு வலியையும் உணருவார்கள் என்று நம்புகிறேன். டெஸ்ட் என்பது காதல் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை. நெட்ஃபிலிக்ஸில் அனைவரும் இதை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.