வீர தீர சூரன் 2 படத்தின் கதை விக்ரம் சாருக்காக எழுதவில்லை: இயக்குநர் அருண்குமார்!

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் 2 திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு ஜாலியாக கலகலப்பாக பேட்டி அளித்து வருகின்றனர்.

சித்தா படத்திற்கு அருண்குமார் யாருடன் இணைந்து பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. சித்தா படத்தின் மீதான தாக்கம் ரசிகர்களை விட்டு நீங்கவில்லை. குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற உனக்குதான் என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. இன்ஸ்டா, முகநூல் பக்கங்களை திறந்தாலே இந்த பாடலில் ரீல்ஸ் வீடியோக்கள் தான் அதிகரிக்க தொடங்கின. இதை பார்த்தது எந்த படத்தின் பாடல் என தேட தொடங்கினர். சிலருக்கு இப்பாடல் காலர்டோனாகவும், ரிங்டோனாகவும் மாறியது. இதைத்தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானதுமே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

வீர தீர சூரன் 2 படத்தின் முதல் பார்வை மற்றும் டீசரும் ஏகபோக வரவேற்பை பெற்றன. நகரத்திற்குள் அட்ராசிட்டி செய்யும் கேங்ஸ்டர்களை காட்டிலும் கிராமத்திற்குள் அதை சுற்றி நடக்கும் கேங்ஸ்டர்களை பற்றிய படம் என்பதாலும் மேலும் ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பிடித்த ஆத்தி ஆத்தி பாடலும் மனதிற்கு இதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இப்படம் பார்த்த பிரபலங்கள் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனராம். இதனால் இப்படம் வெற்றி என்பது உறுதியாகியுள்ளதாம்.

படம் ரிலீஸ் ஆவது உறுதியான நிலையில், படக்குழுவினர் கலகலப்பாக பேட்டியளித்தனர். இப்படத்தில் துஷரா விஜயன் கதாப்பாத்திரம் கலைவாணி என்பது தெரியவந்துள்ளது. மலையாள நடிகர் சுராஜ் விக்ரமை பார்த்து இப்படி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை. ஈகோ இல்லாமல் எல்லோருடனும் சகஜமாக பேசுகிறார் என்று பேசும் வீடியோக்கள் வைராகி வந்தன. இதனிடையே இயக்குநர் அருண்குமார் வீர தீர சூரன் 2 படத்தின் கதை விக்ரம் சாருக்காக எழுதவில்லை என தெரிவித்தார். அதில், முதன் முதலில் விக்ரம் சாரிடம் கதை சொல்ல சென்றபோது, நான் அவரிடம் உங்களுக்காக இந்த கதை எழுதவில்லை சார் என்றே தெரிவித்தேன். படத்திற்கான 20 நிமிட கதையை மட்டும் அவரிடம் கூறினேன். அது அவருக்கு பிடித்து போனது. மீதமுள்ள கதையை எழுதிவிட்டு வாருங்கள் என்று தெரிவித்தார். நானும் சித்தா படத்தை பார்த்து விடுகிறேன் என தெரிவித்தார். சித்தா படத்தை பார்த்த விக்ரம் சார் உடனே என்னை தொடர்பு கொண்டு வீர தீர சூரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதை உலகத்தில் விக்ரம் சார் வர நினைத்ததால் தான் நான் இயல்பாக இப்படத்தை எடுத்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.