என்மீது ரசிகர்கள் இந்தளவுக்கு அன்பு வைத்திருக்க என்ன காரணம்: சமந்தா எமோஷனல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர், நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் கடந்த 2 ஆண்டுகளாக நடிக்கவே இல்லை. ஆனாலும், சமீபத்தில், நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் அவருக்கு பாலசந்தர் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. அதன் வீடியோ தற்போது வெளியான நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் #Samantha ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அந்த மேடையில் விருதை வாங்கிய நடிகை சமந்தா பேசும்போது ரொம்பவே எமோஷனலாகி விட்டார். அவர் அப்படி எமோஷனலாக முக்கிய காரணமே ரசிகர்கள் தான். அந்த அளவுக்கு சமந்தா நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே சமந்தா சமந்தா என கத்தி கூச்சலிட ஆரம்பித்து விட்டனர்.

உடல்நலக்குறைபாடு காரணமாக சினிமாவில் இருந்து சற்றே ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்த சமந்த மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவருக்கு விருதுகள் குவிந்து வருகின்றன. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். அதன் பின்னர், அவருக்கு பாலிவுட்டில் பல பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், மையோசைடிஸ் நோய் பிரச்னை காரணமாக பல பட வாய்ப்புகள் ராஷ்மிகா மந்தனா பக்கம் நகர்ந்து விட்டன. கடைசியாக சமந்தா நடித்த சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸுக்காக அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கேபிஒய் பாலா சமந்தாவுக்கும் எனக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு என சொன்னதும் அனைவரும் ஷாக் ஆகினர். அதன் பின்னர், நானும் பல்லாவரம் பையன் தான் என சொன்னதுமே சமந்தா சிரித்து விட்டார். மேலும், சமந்தாவுக்காக பாடல்களை எல்லாம் பாடி அவரை சிரிக்க வைத்தார் கேபிஒய் பாலா.

கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தான் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டும் கொடுக்கவில்லை. ஆனால், என்மீது ரசிகர்கள் இந்தளவுக்கு அன்பு வைத்திருக்க என்ன காரணமென்றும், அதற்கு நான் தகுதியானவள் தானா என்றே எனக்குத் தெரியவில்லை என நடிகை சமந்தா மேடையில் விருதை வாங்கிய பின்னர் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எமோஷனலாகி விட்டார்.

மீண்டும் சமந்தா தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். லியோ 2வில் நடிக்க வேண்டும் என்றும் கூச்சலிட்டனர். அதையெல்லாம் கேட்டுக் கொண்ட சமந்தா உங்களுடைய மெசேஜ் ரிசீவ் ஆகிடுச்சு என்றார். சீக்கிரமே தமிழில் ஒரு படத்தில் சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.