உங்களுடன் பேசும் குரலாக, உங்கள் குரல் இருக்க வேண்டும். உங்களை நேசிக்கும் குரலாக உங்கள் குரல் இருக்க வேண்டும், என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவர்கள் புத்தகங்களை வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
சேலத்தில் எந்த விழாவாக இருந்தாலும் எனது மனைவிக்கு தான் தகவல் வரும். அவர் மூலம்தான் விழாவில் கலந்து கொள்வதா, இல்லையா என்பதை முடிவு செய்வேன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது பாதியிலேயே வெளியே ஓடி போனவன். இந்த விழாவில் கலந்துகொண்டு என்ன பேசுவது என தெரியாமல் இருந்தேன். சமூகத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்துபவர்கள் ஆசிரியர்கள். இது போலதான் இயக்குநர் ராமிடம் பணியாற்றினேன். நாம் யாரிடம் கற்றுக் கொள்கிறோமோ அவரை போன்று மாறுகிறோம். நம்முடைய லட்சியத்தை அடைவதற்காக நம்மை வழி நடத்துபவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்.
எனது தந்தை அவரது வேலையை பார்த்துக் கொண்டே எங்களது குடும்பத்தை வழி நடத்தினார். தற்போது ஐந்து பேர் அரசுப் பணியில் உள்ளனர். நான் மட்டும் இயக்குநராக இருக்கிறேன். இதன் மூலம் பல்வேறு கருத்துக்களை பரப்பி வருகிறேன். பரியேறும் பெருமாள் திரைப்படம் மாற்று கருத்தாக கூட இருக்கலாம். ஆனால் பலருக்கு பிடித்திருந்தது. இதேபோல் மாமன்னன் திரைப்படம் சிலருக்கு பிடித்திருக்கலாம், சிலருக்கு பிடிக்காமலும் போய் இருக்கலாம். இந்தப் படங்கள் வாழ்க்கையின் பொறுமையை கற்றுக் கொடுத்துள்ளன.
விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் மக்களின் மனநிலை இன்னமும் மாறவில்லை. முன்பு ஊரில் பேசினால் வெளியே தெரியாது. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. பல்வேறு அறிவியல்களை உருவாக்கியது மனிதர்கள் தான். இந்த அறிவியல் நம் அனைவரையும் மாற்றி இருக்கிறது. பரியேறும் பெருமாள் படம் முதலில் வரவேற்பு கொடுத்தாலும் இறுதியில் தான் படம் தரமானது என மக்கள் முடிவு செய்தார்கள். இதன் பிறகுதான் அனைத்து பக்கத்தில் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது.
இந்த படத்திற்கான வெற்றி பொதுசமூகத்திடம் இருந்து தான் கிடைத்தது. படங்களை ஓட வைப்பது பொது சமூகம்தான். ஆசிரியர்களையும் சக நண்பர்களையும் பொது சமூகமாக கருதி பழக வேண்டும். மேலும் நாம் தொடர்ந்து பேசும்போதும், படிக்கும்போதும் மெருகு கூடும். உன்னை அடுத்த கட்டத்திற்கு மாற்றும். எனவே மிகப்பெரிய அளவில் வாசிக்க வேண்டும். எத்தனை மணிநேரம் செல்போனை பார்த்தோம் என்பது இல்லாமல் எத்தனை நேரம் படித்தோம் என்று யோசிக்க வேண்டும். இதுதான் தற்போது முக்கியம். அப்போதுதான் பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
மாமன்னன் படம் எடுக்க யோசித்தபோது எனது மனைவியிடம் தெரிவித்தேன். அப்போது அவர் சேலத்தில் படம் எடுங்களேன்?. உடனே சேலத்தில் படம் எடுத்தால் ஓடாது என்று கூறுவார்கள் எனத் தெரிவித்தார். உடனடியாக சேலத்தில் படம் எடுக்க முடிவு செய்தேன். இது குறித்து உதயநிதியிடம் தெரிவித்தேன். அப்போது அவர் எப்போதும் நெல்லையில் தானே படம் எடுப்பீர்கள், ஏன் சேலத்தில் எடுக்கிறீர்கள் என்று கேட்டார். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. அதன் பின்னர் படம் எடுத்தது சேலத்தில் உள்ள ஜூனியர் நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு இந்தப் படம் ஒரு வாய்ப்பாக இருந்தது. அவர்கள் எவ்வளவு ஏக்கத்தில் இருந்திருப்பார்கள். சேலத்தில் படம் எடுத்தால் ஓடாது என நினைத்திருந்தேன். ஆனால் ஒரு படத்தின் வெற்றி என்பது நல்ல படம் எடுப்பதில் தான் உள்ளது. இந்த படத்தை தமிழ் மக்களே கொண்டாடினர். உங்களுடன் பேசும் குரலாக, உங்கள் குரல் இருக்க வேண்டும். உங்களை நேசிக்கும் குரலாக உங்கள் குரல் இருக்க வேண்டும். இதுதான் நிலையானது.. இதுதான் வாழ்வை மேம்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.