ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்தது தவறு என்பதை தான் உணர்ந்து விட்டதாகவும், சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது என வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ்.
இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஆன்லைன் கேமிங் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா காலத்தில் ஆன்லைன் ரம்மி பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. ஆரம்பத்தில் ஜெயிப்பது போல இருந்தாலும் பின்பு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை அடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சில மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு தடையும் இருக்கிறது. இந்த நிலையில் முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஆன்லைன் ரம்மி ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இதே நிலைதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவுகிறது. இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரணிதா, நிதி அகர்வால், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. சமூக வலைதளங்களில் திடீரென தோன்றும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் திரைப்பட நடிகர்கள் தோன்றி ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிங்கள் என கூறுவதாகவும், மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை அடுத்து புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என பிரகாஷ்ராஜ், பிரணிதா, நிதி அகர்வால் , லட்சுமி மஞ்சு, ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக ஹைதராபாத் காவல்துறை கூறியிருந்தது. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்தது தவறு என்பதை தான் உணர்ந்து விட்டதாகவும், சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது என வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ்.