ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டில் இருந்தும் பின்வாங்கி இருக்கிறது தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பது தெரியாமல் உள்ளது. இதனால் ‘இட்லி கடை’ வெளியீட்டில் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியானது. ஆனால், உறுதிப்படுத்தப்படமால் இருந்தது.
தற்போது ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியிருக்கிறது ‘இட்லி கடை’. இதன் வெளிநாட்டு படப்பிடிப்பு இன்னும் மிச்சம் இருப்பதாகவும், அதில் நடிக்கவுள்ள நடிகர்களிடம் தேதிகள் பெறப்பட்டு வருவதாகவும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேலும், அனைவருடைய தேதிகள் ஒன்றாக அமையும் பட்சத்தில் தான் வெளிநாட்டு படப்பிடிப்பு திட்டமிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏப்ரல் 10-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மட்டுமே வெளியாகும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.