விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துடன் விஜய்யின் காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதர நடிகர்களின் காட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ‘ஜன நாயகன்’ வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றத்துக்கு மிக முக்கிய காரணம் ஓடிடி உரிமை விற்பனை என்று கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இது விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.