ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து தனது இரண்டாவது படமாக டிராகன் படத்தை இயக்கினார். பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியன் என பலர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலித்த சூழலில் அவரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய்.
அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்த படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து அந்தப் படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது சான்ஸை ஒன் லைனாக வைத்துக்கொண்டு அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அஸ்வத். படம் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் வெளியானது. ஆனால் வெளியான பிறகு படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குநராக மாறிவிட்டார் அஸ்வத் மாரிமுத்து.
தமிழில் ஓ மை கடவுளே ரிலீஸுக்கு பிறகு தெலுங்குக்கு சென்று அங்கு அந்தப் படத்தை ரீமேக்கினார் அவர். அதனைத் தொடர்ந்து தனது கல்லூரி நண்பரும், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டார். ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸ் பேனரில் இயக்கிய லவ் டுடே திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூலித்திருந்ததால்; அந்த நிறுவனமே பிரதீப்பை ஹீரோவாக வைத்து டிராகன் படத்தை தயாரிக்க முன்வந்தது. இதில் மிஷ்கின், ரவிக்குமார், தேனப்பன், அனுபமா என பலர் நடித்திருந்தார்கள். அதேபோல் பிரபல யூடியூபர்களான விஜே சித்து, ஹர்ஷத் கானும் நடித்திருந்தார்கள்.
படமானது கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. டான் படத்தின் இரண்டாவது பாகம் போல்தான் இருக்கும் என்று ட்ரெய்லரை பார்த்து விமர்சித்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து பிரமித்துவிட்டார்கள். சரியான கருத்தை பிரசார நெடியில்லாமல் கமர்ஷியலாகவும், எமோஷனலாகவும் இயக்குநர் சொல்லிவிட்டார் என்றும்; மிஷ்கின், பிரதீப் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் ஜார்ஜ் மரியனின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்றும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். இதன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அஸ்வத் மாரித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் விஜய்யை சந்திப்பதற்கு எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறேன் என்று மக்கள் அறிவார்கள். அவரை இன்று சந்தித்தபோது அவருக்கு எதிரே அமர்ந்திருந்தேன். நான் விஜய்யின் எவ்வளவு பெரிய ரசிகன் என்று எனது டீமுக்கு நன்றாகவே தெரியும். விஜய் என்னை ஆழமாக பார்த்தார். எனக்கு கண்ணீர் வழிந்தது. எனது டீம் ஆச்சரியப்பட்டார்கள். விஜய் மீது ஏன் இவ்வளவு அன்பு என்று என்னிடம் கேட்டார்கள். அதெல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது. என்னை பார்த்து அவர், ‘செம ரைட்டிங் ப்ரோ’ என்று கூறினார்” என பதிவிட்டிருக்கிறார்.