நடிகை தமன்னாவின் நடிப்பில் உருவாகி உள்ள ஓடெலா 2 திரைப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர் பலரும் பல கேள்விகளை கேட்ட நிலையில், அப்போது பெண் செய்தியாளர் ஒருவர், தமன்னாவை கேட்ட கேள்வி அவரை சங்கடத்தில் ஆழ்த்தியது.
2022ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் Odela Railway Station. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அசோக் தேஜா இயக்கியுள்ள இப்படத்தை மது தயாரிக்க ஹெப்பா படேல், தயானந்த் ரெட்டி, யுவா, முரளி சர்மா, ஷரத் லோகிதாஷ்வா நடிக்க இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் தமன்னா ஒரு சாத்வி சிவசக்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமன்னாவின் திரைப்பயணத்தில் முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அவர் இப்படத்தில் நடித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படம், அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பல செய்தியாளர்கள் கலந்து கொண்டு பல கேள்விகளை கேட்டனர். அப்போது, பெண் செய்தியாளர் ஒருவர், மில்கி பியூட்டியான தமன்னாவை எப்படி நீங்கள் சிவசக்தியாக நடிக்கவைக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்வியால் கடுப்பான தமன்னா, உங்கள் பெயர் என்ன.. நீயும் பெண்ணுதானே.. என்ன கேள்வி கேட்குறீங்க என்றார்.
மேலும், உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு, ஒரு மில்கி பியூட்டி சிவசக்தியா நடிக்கக்கூடாதா? இவர் ஒரு மில்கி பியூட்டியை தப்பாகவோ, கவர்ச்சியாகவோ நினைக்கவில்லை. ஒரு பெண்ணினுடைய கவர்ச்சி கொண்டாடப்பட வேண்டும். பெண்கள் முதலில் நம்மை நாமே கொண்டாடிக்கொள்ள வேண்டும், அதன் பிறகு தான் மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். நம்மை நாமே வேறுஒரு கோணத்தில் பார்த்தால் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள். அசோக் தேஜா பெண்களை தப்பான எண்ணத்தில் பார்க்கக்கூடிய நபர் இல்லை. அவர் பெண்களை தெய்வமாக பார்க்கக் கூடியவர். தெய்வம் கவர்ச்சியாக இருக்கலாம்.. சக்தி வாய்ந்ததாக இருக்கலாம்.. கொடியதாகவும் இருக்கலாம்.. தெய்வம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என தமன்னா அந்த கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.