விஜய்யின் கோட் படம் தனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது: பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய்யின் கோட் படம் தனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்த படம் எனக் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், அந்த படத்தில் நடிதத மீனாக்‌ஷி சவுத்ரியும் தனக்கு அந்த படத்தில் நடித்தது மனதளவில் பல பாதிப்புகளை உருவாக்கியது என்று பேசியிருந்தார். இந்நிலையில், பார்வதி நாயரும் கோட் படத்தில் நடித்த அனுபவங்கள் மிகவும் மோசம் எனக்கூறியிருக்கிறார்.

மலையாளத்தில் ஹீரோயினாக நடித்து வந்த எனக்கு தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போ எனக்கு லவ் பிரேக்கப் ஆன சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் சார் தான் வாழ்க்கை குறித்த நம்பிக்கை எல்லாம் மனதில் விதைத்தார். கெளதம் மேனன் சார் எனக்காக நிறைய காட்சிகளை மாற்றியமைத்து முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், அந்த அளவுக்கு முக்கியத்துவம் விஜய் படமான கோட் படத்தில் கிடைக்கவில்லை என பார்வதி நாயர் கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்தில் என்னோட 90 சதவீத காட்சிகள் தூக்கப்பட்டு விட்டன. அந்த படம் வெளியான பின்னர், படத்தில் எனக்கான போர்ஷன் எதுவுமே பெருசாக இல்லை என்பதை அறிந்து ரொம்பவே வருத்தம் தான். ஹீரோயினாக நடித்து வந்த நான், அதன் பின்னர் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்ற நிலையில், அந்த படங்களிலும் முக்கியத்துவம் மிஸ் ஆவது வருத்தத்தை அளித்துள்ளது என போட்டு உடைத்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி படங்களில் நடித்த பார்வதி நாயருக்கு 2018ம் ஆண்டுக்கு பிறகு தமிழில் எந்தவொரு படத்திலும் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் கோட் படத்தில் தான் வெங்கட் பிரபு வாய்ப்பு வழங்கினார். ஆனால், அந்த படத்தில் நடித்தது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என பார்வதி நாயர் கூறுகிறாரே என விஜய் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பார்வதி நாயரை கலாய்த்து வருகின்றனர்.