நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!

ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குண்டூர் பர்மா காலனியில் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெடுத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். அவருக்கு கோவில் அமைத்து கோவிலினுள் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்.

கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். கோவிலில் உள்ள சமந்தா சிலை முன்பு குடும்பத்தோடு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.