எத்தனையோ பாரம்பரிய உணவுகள் இருந்தாலும் எனக்கு பிடித்தது கிச்சடி தான்: கரீனா கபூர்!

ஊட்டச்சத்து நிபுணர் ருதுஜா திவாகரின் ‘தி காமன்சென்ஸ் டயட்’ என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை கரீனா கபூர், தனது உடற்பயிற்சி மற்றும் உணவு ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார். எளிமையான, வீட்டில் சமைத்த உணவுகள் மீதான தனது அன்பை பற்றியும் அவர் வெளிப்படுத்தினார்.

சைவ உணவைப் பின்பற்றுவது தனது உடலையும் சருமத்தையும் எவ்வாறு கணிசமாக மாற்றியது என்பது பற்றியும், தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் பொருத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதற்கு, நான் அவரது (ருதுஜா) வழிகாட்டுதலுடன் சரியாக சாப்பிட வேண்டும். எனக்கு அதுதான் முதுமையும் வாழ்க்கையும். நான் அதை விரும்புகிறேன், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.

கடினமான வேலை நாட்களுக்குப் பிறகு வீட்டு சாப்பாடு சாப்பிடுவதுபோல் எதுவுமே வராது. தற்போது, நானும் சயிஃப் அலி கானும் சமைக்க தொடங்கி இருக்கிறோம். நாங்கள் அதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். இது எங்களது ஆளுமையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சயிஃப் என்னைவிட நன்றாக சமைப்பார். எனக்கு முட்டையைக் கூட வேகவைக்கத் தெரியாது” என்று பேசினார்.

தனது உடற்பயிற்சி முறையைப் பற்றி பேசுகையில், அழகுசாதன சிகிச்சைகளை விட வலிமை பயிற்சி, தினசரி நடைப்பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் இளமையாக தோற்றமளிப்பதாக கரீனா தெரிவித்தார்.

உணவுடன் தனக்குள்ள உறவு குறித்து மனம் திறந்து பேசிய கரீனா, “நான் குண்டாக இருந்த ஆரம்ப ஆண்டுகளில், உணவுடன் எனக்குள்ள உறவு அற்புதமாக இருந்தது. என்னை நானே ஒருநாளும் பட்டினி கிடக்க முயற்சித்ததில்லை. என் டீனேஜ் பருவத்திலும், ஒரு பாக்கெட் சிப்ஸ் சாப்பிடுவதில் கூட நான் எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அப்போது ஒரு தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக இருந்தேன்.. கடந்த 10–15 ஆண்டுகளில், நான் அதே உணவுக்குத் திரும்பிவிட்டேன். நான் எப்போதும் அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எத்தனையோ பாரம்பரிய உணவுகள் இருக்கின்றன. ஆனால், எனக்கு பிடித்தது கிச்சடி தான். மூன்று நாளைக்கு கிச்சடியை சாப்பிடவில்லை என்றால் எனது மனம் மீண்டும் எப்போது சாப்பிடுவது என ஏங்கத் தொடங்கிவிடும். உணவில் கிச்சடி இல்லையென்றால், இரவில் என்னால் தூங்க முடியாது. 10-15 நாட்களுக்கும் நான் ஒரே உணவை உண்ணவும் தயாராக இருப்பதால் எனது சமையல்காரர் கடுப்பாகிறார். வாரத்தில் ஐந்து நாட்களுக்கும் கிச்சடி சாப்பிடுவது என்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான். மிருதுவான அந்தக் கட்டியின் மீது இருக்கும் நெய் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அது எனக்கு நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, அது எனக்கு ஆறுதல் அளிக்கிறது, அது என்னை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது என்பதை நான் விரும்புகிறேன்” என்றார்.