வீர தீர சூரன் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சித்தா படத்தைத் தொடர்ந்து அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வீர தீர சூரன் 2ம் பாகம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலக அளவில் 52 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக எச்.ஆர். பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வீர தீர சூரன் 2ம் பாகம் திரைப்படம் சற்றே ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், கடந்த மார்ச் 27ஆம் தேதி பல போராட்டங்களை சந்தித்து கடைசியாக மாலை நேர காட்சியாக திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பலரும் விக்ரமுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இது மிகப்பெரிய கம்பேக் படம் என பாராட்டினர். தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ரசிகர்களுக்கு திருப்திகரமான படமாகவும் வீரதீர சூரன் 2ம் பாகம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமாருக்கு அவர் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அந்த படத்தை பார்த்து வியந்து போன விக்ரம் வீர தீர சூரன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அருண் குமார் வீர தீர சூரன் 2ம் பாகத்தை வெற்றிப் படமாக மாற்றி காட்டியுள்ளார். விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் இதுவரை இந்தியளவில் 28.50 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டியிருப்பதாக Sacknilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. வீர தீர சூரன் திரைப்படம் உலகளவில் 52 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான எச்.ஆர். பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சீயான் விக்ரம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.