எம்புரான் பட இயக்குநரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்த போது அவர் ஈட்டிய வருவாய் தொடர்பான கணக்கு விவரங்களை கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோல்டு, ஜனகன மன, கடுவா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.அந்த படங்களின் இணை தயாரிப்பாளராகவும் அவர் இருந்தார். எனினும் இந்த படங்களில் நடித்ததற்கு அவர் எந்த ஊதியத்தையும் வாங்கவில்லை. மாறாக இணைத் தயாரிப்பாளராக இருந்ததால் அதற்கான வருவாயை மட்டும் ஈட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த 3 திரைப்படங்களிலும் பிருத்விராஜ் தோராயமாக ரூ 40 கோடி வருவாய் பெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. நடிகருக்கான வருமான வரியை காட்டிலும் இணை தயாரிப்பாளராக இருந்தால் அவர்களுக்கு வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது. எனவே பிருத்விராஜ் செலுத்திய வருமான வரி எதன் அடிப்படையில் செலுத்தப்பட்டது என சந்தேகம் எழுந்துள்ளதாம். இதனால் வரும் 29ஆம் தேதிக்குள் அந்த படத்தின் மூலம் ஈட்டிய வருவாய் குறித்து கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறை நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.
இந்த 3 திரைப்படங்களுமே கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகின. இந்த வருவாய் கணக்கு தொடர்பாக ஏற்கெனவே விளக்கங்கள் கேட்டு பெறப்பட்டன. எனினும் தற்போதைய நிதியாண்டு முடிந்துள்ளதால் புதிதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது பிருத்விராஜுக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டது. இந்த வருவாய் கணக்குகளை அவரே நேராகவோ அல்லது அவர் தரப்பில் வேறு யார் மூலமாகவோ விளக்கமளிக்கவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் வழக்கமான ஒன்றுதான் என வருமான வரித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
எம்புரான் திரைப்படத்தின் இயக்குநராக பிருத்விராஜ் பணியாற்றியுள்ளார். நேற்றைய தினம் எம்புரான் படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்குச் சொந்தமான இடங்களில் சென்னையில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. அப்போது ரூ 1000 கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்லப்பட்டது. சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான 5 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது ரூ 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
எம்புரான் படம் ரிலீஸான போதிலிருந்தே பிரச்சினை எழுந்து வருகிறது. குஜராத் கலவரம், இந்திய ராணுவத்தை அவமதித்தல், முல்லை பெரியாறு பிரச்சினை, கர்ப்பிணியை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்த படம் பலரது மனதை நோகடித்ததற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக மோகன்லால் தெரிவித்திருந்தார். அது போல் படத்தில் 24 இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அது போல் வில்லனின் பெயர் பஜ்ரங்கியில் இருந்து பல்தேவ் என மாற்றப்பட்டது. மேலும் சுரேஷ் கோபியின் பெயர் டைட்டில் கார்டிலிருந்து நீக்கப்பட்டது. இந்த படத்தில் வெட்டப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.