பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்த நடிகர் பிரசாந்த் கடந்த ஆண்டு விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் செம சூப்பரான கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் செய்தார். மேலும், அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகன் படமும் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பிரசாந்துக்கு கொடுத்தது. ஓடிடி தளத்திலும் அந்தாதூன் ரீமேக்கான அந்தகன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், அதன் பின்னர் பிரசாந்த் எங்கேப்பா ஆளே காணோம் என ரசிகர்களே கேட்கத் தொடங்கிவிட்டனர்.
51 வயதான பிரசாந்த் அடுத்ததாக திருமணம் செய்துக் கொள்வாரா? அல்லது தனது அடுத்த படத்தை அறிவிப்பாரா? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், அனைத்துக்கும் அவரது பிறந்தநாளில் விடை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஏப்ரல் 6ம் தேதி நடிகர் பிரசாந்த் தனது 52வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட காத்திருக்கிறார். கடந்த ஆண்டு பிரசாந்தின் பிறந்தநாளில் தான் அவர் நடித்த படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகின. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நல்ல நண்பனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார். அந்தகன் படத்தில் சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த் உடன் இணைந்து அவர் பண்ண பர்ஃபார்மன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் 1990ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி உள்ளிட்ட பல படங்கள் இன்றளவும் பிரசாந்த் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டான படங்களாகவே உள்ளன. ஹரி இயக்கத்தில் 2002ம் ஆண்டு ‘தமிழ்’ எனும் படத்திலும் பிரசாந்த் அட்டகாசமாக நடித்திருப்பார். அந்த படத்திலும் அவருக்கு ஜோடி சிம்ரன் தான்.
இந்நிலையில், மீண்டும் ஹரி இயக்கத்தில் தான் பிரசாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரசாந்த் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.