அறைகுறை அறிவோடு ஜட்ஜ் பண்றதை நிறுத்துங்க: மாளவிகா மோகனன்!

நடிகர்கள் மோகன்லால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகும் ‘ஹ்ரிதயபூர்வம்’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தற்போது இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மாளவிகா மோகனன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் மோகன்லால் மற்றும் மாளவிகா ஆகியோருக்கு இடையே உள்ள 33 வருட வயது வித்தியாசம் குறித்து கருத்து தெரிவித்தார்.

மாளவிகாவின் பதிவில் ஒரு ரசிகர், மோகன்லால் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்காமல், மாளவிகாவுடன் ‘காதல் கதாபாத்திரத்தில்’ நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் “64 வயதான நபர் 31 வயது பெண்ணுடன் காதல் கதாபாத்திரத்தில் நடிப்பது என்ன அர்த்தம்? தங்களது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்காமல் மூத்த நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஏன் ஆர்வமாக இருக்கிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோகன்லாலின் வயது 64 மற்றும் மாளவிகாவின் வயது 31. இதற்கு பதிலளித்த மாளவிகா, படத்தில் தான் மோகன்லாலுடன் காதல் காட்சிகளில் நடிப்பதாக யார் சொன்னது? உங்கள் அரை குறை அறிவோடு, அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளுடன் மக்களை மதிப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

‘ஹ்ரிதயபூர்வம்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்த மாளவிகா, இந்த படத்தின் அனுபவம் மிகவும் அழகானது. முழுமையானது. இது மனதை வருடும் அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மூத்த கலைஞர்களான மோகன்லால் சார் மற்றும் சத்யன் சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களைப் பார்த்து, அவர்களின் வழிகாட்டலில், எப்படி ஒரு திரைக்கதை மாயாஜாலமாக உருவாக்குகிறார்கள் என்பதைப் பார்த்து வியந்தேன். அவர்கள் அனைத்தையும் மரியாதை, மதிப்பு மற்றும் அழகுடன் எவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பார்த்து மகிழ்ந்தேன் எனக் கூறியுள்ளார். கேரளாவின் தேக்கடியில் உள்ள மலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில், மாளவிகா மோகனன் தமிழ் படமான ‘தங்கலான்’ மற்றும் இந்தி படமான ‘யுத்ரா’ ஆகியவற்றில் நடித்தார். தற்போது தெலுங்கு படமான ‘தி ராஜா சாப்’ படத்தில் பிரபாஸுடனும், தமிழ் படமான ‘சார்தார் 2’ படத்தில் கார்த்தியுடனும், மலையாள படமான ‘ஹ்ரிதயபூர்வம்’ படத்திலும் நடிக்க உள்ளார்.