ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

“பாட்ஷா படத்தின் 100-வது நாள் விழாவில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து நான் பேசினேன். அப்போது ஆர்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் ஆர்.எம்.வீரப்பன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:-

ஆர்.எம்.வீரப்பன் ஆவணப்படத்தில் நான் பேசுவது மகிழ்ச்சி. எனக்கு மரியாதை கொடுத்து, என் மீது அதீத அன்பு பொழிந்தவர்கள் சிலர். பாலசந்தர் சார், சோ சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்.எம்.வீரப்பன் சார் ஆகியோர் இல்லை எனும்போது சில நேரங்களில் கடினமாக இருக்கிறது. அவர்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.

பாட்ஷா படத்தின் 100-வது நாள் விழாவில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து நான் பேசினேன். ஆர்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை. அதிமுகவில் அவர் அமைச்சராக இருந்தார். ‘நீங்கள் அமைச்சர் மேடையில் இருக்கும்போது, அரசுக்கு எதிராக ரஜினி எப்படி பேசலாம்’ எனக் கூறி ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த தகவலை அறிந்த உடன் ஆடிப்போனேன். என்னால் தான் இப்படி நடந்துவிட்டது என்பதால் இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லை. அவரை தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்டேன். ஆனால், அவர் எதுவும் நடக்காதது போலதான் பேசினார். சர்வ சாதாரணமாக பேசினார். ஆனால் என் மனதில் இருந்து அந்த வடு மறைய இல்லை.

ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும், இந்தக் காரணம் மிகவும் முக்கியமானது. நான் ஜெயலலிதாவிடம் பேசவா, எனக் கூட கேட்டேன். ஆனால் அவர் உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அப்படி நீங்கள் சொல்லி, அங்கேபோய் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இதை அப்படியே விட்டுவிடுங்கள் என்றார். அப்படி ஒரு பெரிய மனிதர். கிங் மேக்கர்.. ரியல் கிங் மேக்கர். இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.