எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல: விஷ்ணு விஷால்

எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல என்று தோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும். எந்தவொரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல உள்ளது. எந்தவொரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த முறை அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார். மேலும் வழக்கமாக ஆறாவது வரிசையில் பேட்டிங் இறங்கும் அவர், நேற்று 9வதாக இறங்கியது விமர்சனத்துக்குள்ளானது. தோற்றுக் கொண்டிருக்கும் அணியை ஒரு கேப்டனாக அவர் முன்கூட்டியே இறங்கி காப்பாற்ற முயற்சி செய்திருக்க வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே நடிகர் விஷ்ணு விஷாலும் தோனியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 10 ஓவர்களிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி சிஎஸ்கே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.