இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டே நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது. மேலும், ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் பூஜா ஹெக்டே. ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக தெலுங்கு மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்த பூஜா் ஹெக்டே, சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றியது குறித்தும் கூலி படத்தில் தன்னுடைய பாடல் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. ஆனால், அவர் நடித்த முதல் படம் அவருக்கு வெற்றிகரமாக ஓடவில்லை. இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான மொஹஞ்சதாரோ படத்திலும் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு பாலிவுட்டிலும் வெற்றி கிடைக்கவில்லை. தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பூஜாவுக்கு அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின. தமிழில் பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் இணைந்து நடித்த பீஸ்ட் திரைப்படம் அவருக்கு ஃபிளாப் படமாக மாறியது.
கடந்த ஒரு வருடமாக பூஜா ஹெக்டேவுக்கு படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவருக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. பாலிவுட்டில் தேவ் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அடுத்ததாக ஒரு மே 1ம் தேதி சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள ரெட்ரோ படம் வெளியாக காத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள கூலி படத்தில் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். மேலும், பீஸ்ட் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்திலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இந்தியா முழுவதும் பல படங்களில் நடித்து வருகிறீர்கள் அதற்காக எப்படி உங்களை தயார் செய்து கொள்வீர்கள் என்கிற கேள்வியை பேட்டி எடுப்பவர் முன்வைத்த நிலையில், சட்டென அதற்கு பதில் அளித்த பூஜா ஹெக்டே, ஸ்டார் நடிகர்களை பார்த்து எப்போதுமே நான் தயாராக மாட்டேன். அந்த படத்தில் எனக்கு என்ன ரோல் என்பதை மட்டுமே பார்த்து தயார்படுத்திக் கொள்வேன் என பதில் அளித்துள்ளார்.
கூலி படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன என்கிற கேள்விக்கு, அந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறேன். ரஜினிகாந்த் சார் உடன் பணியாற்றிய அனுபவம் ரொம்பவே ஸ்பெஷல். தமன்னாவின் காவாலா பாடல் போல இருக்குமா என்கிற கேள்விக்கு, இல்லை இது முற்றிலும் வேறு விதமான வைபில் இருக்கும் நிச்சயம் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள் என பூஜா ஹெக்டே பதில் அளித்துள்ளார்.