சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் அல்ல என்று பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பூஜா ஹெக்டே. முதலில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சமூக ஊடகங்கள் குறித்த கேள்விக்கான பூஜா ஹெக்டேவின் பதிலுக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்கள் குறித்து பூஜா ஹெக்டே, “எனக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு என்னால் பாக்ஸ் ஆபிஸில் 30 மில்லியன் டிக்கெட்கள் விற்றுவிடும் என்று அர்த்தமல்ல. 5 மில்லியனுக்கு அதிகமான ஃபாலோயர்கள் கூட இல்லாதவர்கள் பெரிய ஸ்டாராக இருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் என்பது உண்மையான உலகம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.