தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் மூத்த பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. இவர் பாடலாசிரியராக மட்டும் இல்லாமல், எழுத்தாளர், கவிஞர் என கிட்டத்தட்ட ஒரு தமிழ் புலவரைப் போலவே உள்ளார். இவர் இதுவரை சுமார் 8000 திரைப்பட பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாடலில் இடம் பெற்ற வரிகளைக் கேட்கும் போது முதலில் தனக்கு வைரமுத்து மீது கோபம் வந்ததாகவும், அவர் எழுதிய வரிகளை நினைத்து அருவருப்பாக உணர்ந்ததாகவும் பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தமிழ் இலக்கியம் குறித்தும் தமிழ் சினிமா பாடல்கள் குறித்தும் பேசினார். அவர் பேசும்போதுதான் வைரமுத்து மீது கோபம் வந்ததாகவும் அவரது பாடல் வரிகளை நினைத்து, தான் அருவருப்பாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசியலைத் தீர்மானித்ததில் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மற்றும் பணியாற்றி வரும் 2000 பாடலாசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் தங்களது பாடல் வரிகளின் மூலம் தமிழ்நாடு அரசியலைப் பற்றி பேசியுள்ளார்கள், பாடல்கள் மூலம் தமிழ் நாடு அரசியல் சூழலைத் தீர்மானித்துள்ளார்கள். தமிழ் சினிமா பாடல்களில் இலக்கியம் என்பது மிகவும் நுட்பமானது. இன்றைய காலகட்டத்தில் இலக்கிய உணர்வோடு பாடலை எழுதினால், இந்த காலத்திற்கு ஏற்றதைப் போல் டிரெண்டாக எழுதிக் கொடுங்கள் என, இயக்குநர்கள் கேட்கிறார்கள். நான் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமா பாடல்களைக் கேட்டு வருகிறேன். அப்போது எல்லாம் எனக்கு இலக்கியமும் தெரியாது, எதுவும் தெரியாது.
அதன் பின்னர்தான் எனக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்தது. ஜீன்ஸ் என்ற படத்தில் கவிஞர் வைரமுத்து அன்பே அன்பே கொல்லாதே என்ற பாடலை எழுதியிருப்பார். அந்த பாடலில் ‘பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்.. தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்’ என்ற வரிகள் உள்ளது. இந்த வரிகளை முதன் முதலாக கேட்டபோது யாராவது ஒரு பெண் குளித்த தண்ணீரைக் குடிப்பார்களா? என்ற கேள்விதான் மனதில் எழுந்தது. இதற்காக வைரமுத்து மீது எனக்கு செல்ல கோபமும் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதாஸ்தப்தஸ்ரீ என்ற ஆந்திர நாட்டு அகநானூறு பாடலை தமிழில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் எப்படி அகநானூறு உள்ளதோ, அதேபோல் தெலுங்கிலும் அகநானூறு உள்ளது. இந்த புத்தகம் இணையத்தில் உள்ளது. இதில் நானூறு பாடல்கள் உள்ளது.
அதில் ஒரு பாடல் உள்ளது. ‘நான் இந்தக் கரையில் குளித்துக் கொண்டு இருந்தேன். எதிர்க்கரையில் ஒரு பையன் வந்தான். வந்தவன் என்னைப் பார்த்தான். நான் மஞ்சள் தேய்த்து குளித்துக் கொண்டு இருந்ததால், தண்ணீர் எல்லாம் மஞ்சளாக இருந்தது. அந்த மஞ்சள் நீர் எதிர்கரையைக் கடந்து போகும்போது என் நெஞ்சை அள்ளிக் குடித்தது போல இருந்தது’ என உள்ளது. தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் என்பதை இந்த தெலுங்கு அகநானூற்று பாடலில் இருந்துதான் வைரமுத்து எழுதி உள்ளார் என்பது எனக்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது” என பேசியுள்ளார்.