இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலத்தில் பேசுகிறேன்: கமல்ஹாசன்!

‘தக் லைஃப்’ பட விழாவில் முதலில் தமிழில் ‘உயிரே.. உறவே.. தமிழே” என வணக்கம் சொல்லிவிட்டு, “இதற்கு மேல் இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்” எனச் சொல்லி ஆங்கிலத்தில் பேச்சைத் தொடர்ந்தார் நடிகர் கமல்ஹாசன்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச உள்ளதாக கூறி நடிகர் கமல்ஹாசன் தனது பேச்சை தொடங்கினார். “இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழனின் கைப்பழக்கம். 2000 ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறி ஆங்கிலத்தில் உரையாற்றினார் நடிகர் கமல்ஹாசன்.

தொடர்ந்து கமல்ஹாசன் பேசுகையில், “மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே காரணம். மணிரத்னத்துக்கு அஞ்சரை மணி ரத்னம் என்ற பட்டப்பெயர் வைத்துள்ளேன். அதுக்கு காரணம் படப்பிடிப்பு அன்று காலை 5 மணிக்கே வந்துவிடுவார். இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் ‘நாயகன்’ மற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படங்கள். சிம்புவின் அப்பாவிற்கு என் மேல் பாசம் அதிகம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அழுதுவிடுவார். அழுதே என் சட்டையை நனைத்து விடுவார். அது ஒரு தலைமுறை. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது மாதிரி சிம்புவும் குறையாமல் பாசம் காட்டினார். இந்த டயலாக் படத்திலும் இருக்கு. அவரைப் பார்த்து நான் சொல்வது போல வசனம் இருக்கிறது. பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.

மேடையில் இருக்கும் இந்த 2 கதாநாயகிகளும் இந்த படத்துல ஒரு தடவை கூட என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லவில்லை. ஆனா தினந்தோறும் காலை, மாலை எப்போது ஷூட்டிங்கிற்கு வந்தால் என்னை பார்த்து சார், ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான். அதனால் மனதைக் கொஞ்சம் தேற்றிக்கொண்டேன். மணிரத்னம் முதல் முறையாக ராஜ் கமல் நிறுவனத்துடன் சேர்ந்திருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள் அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போய்விட்டு வந்தால்கூட சினிமா பற்றிதான் பேசுவேன். நீங்கள் கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும். பழகுனா சினிமாவையே நீங்க பார்ப்பீங்களா? நான் தினமும் கத்துக்கிறேன். கத்துகிட்ட விஷங்களை மறக்க நினைக்கிறேன். மொழிப் போர் நடந்துட்டு இருக்குற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ரஹ்மான் கொடுத்த ஐடியாவை ஜிங்குச்சானு வார்த்தையை பயன்படுத்தினோம். அது சீனா வார்த்தையாகக் கூட இருக்கலாம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.