இயக்குநர் பார்த்திபன் தமிழ் சினிமாவிலேயே வித்தியாசத்திற்கு பெயர் போனவர். இவர் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு, சௌந்தர்யா குறித்து கவிதை எழுதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பார்த்திபன் ஒரு விருட்சம். பலரும் சினிமாவில் பணத்திற்காக ஓடிக்கொண்டு இருக்கும் காலத்தில், சினிமாவை தன் மூச்சு போல நினைக்கும் வெகு சில திரைக்கலைஞர்களில் இவரும் ஒருவர். பார்த்திபனின் நக்கல் நிறைந்த நடிப்புக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு இவரது இயக்கத்திற்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்குச் சென்றால், ஒரு வித்தியாசமான சினிமாவைப் பார்த்த உணர்வு இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார். இவரது வித்தியாசமான படங்கள் சில நேரங்களில் ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறது, சில நேரங்களில் ஒர்க் அவுட் ஆவதில்லை.
பார்த்திபன் இன்று அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில், நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்து கவிதை எழுதியுள்ளார். சௌந்தர்யாவின் நினைவு நாள் ஏப்ரல் 17ஆம் தேதி என்றாலும், அவர் இன்று அவரது நினைவு குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, “மறக்கத்தான் நினைக்கிறேன் மறந்தால் தானே நினைப்பதற்கு? மறைந்தால் தானே அழுவதற்கு? இருக்கும் போதே மறைந்துப் போகிற உறவுகளுமுண்டு, போன பின்பும் மனசோட ஒட்டிகிட்டிருக்க நினைவுகளுமுண்டு! -இவன்” என பதிவிட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘இவன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் செய்திருந்தார் பார்த்திபன். நடிகை சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.