இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: நடிகர் சூர்யா!

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அதனை வெங்கி அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும். இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என விரும்புகிறேன். பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக என் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று விஜய் தேவரகொண்டா கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:-

உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன, வலியை நெருக்கமாக பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், அவர்களின் வலியையும் கோபத்தையும் நாங்கள் உணர்கிறோம். அது நடந்திருக்கக் கூடாது. இந்த சம்பவங்கள் காஷ்மீரில் தொடர்ந்து நடக்கின்றன. அவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட வேண்டும், மூளைச்சலவை செய்யப்படக்கூடாது.

காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், காஷ்மீரிகள் மனிதர்கள். நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் குஷி படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தேன். அப்போது அவர்களுடன் எனக்கு அழகிய நினைவுகள் உள்ளன.

நாட்டின் குடிமக்கள் வளங்கள் இல்லாததால் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். முறையான மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாத தங்கள் சொந்தங்களை கூட பாகிஸ்தான் கவனிக்க முடியாது. தங்கள் மக்களை கவனித்துக் கொள்ள முடியாததால் பாகிஸ்தானியர்கள் இங்கு என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?

பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்ந்தால், பாகிஸ்தானியர்களே வெறுப்படைந்து தங்கள் அரசாங்கத்தைத் தாக்குவார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் செய்ததைப் போலத்தான் இவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கு எந்த அறிவும் குறைந்தபட்ச பொது அறிவும் இல்லாமல் அவர்கள் செய்யும் விஷயங்கள் இவை. மக்களாக, நாம் ஒன்றாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டும்.

கல்வி தான் மிகச் சிறந்த சாவி. எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம், நம் பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்போம். அப்போதுதான் நம்மால் முன்னேற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.