நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட உள்ளார்.
நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடகர், முக்கியமாக சண்டைக் கலைஞர்.. இப்படி பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்து ஆசிய கண்டத்தைக் கடந்து, ஹாலிவுட் உலகை தம் பக்கம் திரும்பி விண்ணளவு வியந்து பார்க்கச் செய்த ‘ஜாக்கி சானுக்கு’ வாழ்நாள் சாதனையாளர் விருதளிக்கப்பட உள்ளது.
71 வயதைக் கடந்தாலும் இளமைத் துடிப்புடன் செயல்படும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜாக்கி சானுக்கு சுவிட்ஸர்லாந்தில் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறவுள்ள 78-ஆவது ‘லோகேர்னோ திரைப்பட விழாவில்’ இந்த உயர் கௌரவம் வழங்கப்படவுள்ளது. அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இந்த விருதைப் பெற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த ஜாக்கி சானுக்கு சாதனைகள் புதிதல்ல என்றாலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘லோகேர்னோ திரைப்பட விழா’ அரங்கில் விருது வழங்கப்பட உள்ளது பெருமையானதொரு மகுடமாகும்.