சூரியின் ‘மாமன்’ ட்ரெய்லர் வெளியானது!

சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படம் மே 16-ம் தேதி வெளியாகிறது. இதன் கதையை சூரி எழுத, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். குடும்ப பின்னணி கொண்ட கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது. இதில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவனும் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தன் அக்கா ஸ்வாசிகாவின் மகன் மீது வயிற்றில் இருக்கும்போதில் இருந்தே மிகுந்த பாசமாக இருக்கிறார் மாமன் சூரி. குழந்தை பிறந்து வளர்ந்து சிறுவனான பிறகும் கூட பாசமழை பொழிகிறார். குடும்பத்தில் வரும் சிக்கல், மோதல் ஆகியவற்றுக்கு இடையிலும் கூட அக்கா மகனை அரவணைக்கிறார். படத்தின் பிரதான கதை இதுதான் என்பதை ட்ரெய்லர் சொல்லி விடுகிறது. ஹீரோவாக சூரியின் முந்தைய படங்களை காட்டிலும் இதில் ரொமான்ஸ், செண்டிமெண்ட், மாஸ் என புதிய அவதாரம் காட்டியிருக்கிறார்.