கவுண்டமணி மனைவிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் விஜய்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இரவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார்.

தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகராக இருப்பவர் கவுண்டமணி. இவருக்கு வயது 85 ஆகிறது. 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக அவர் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். இருப்பினும் கவுண்டமணி நடித்த காமெடி சீன்கள் இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. தற்போது நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கவுண்டமணியின் மனைவி சாந்தி நேற்று திடீரென்று காலமானார். அவருக்கு வயது 67. உடல்நலக்குறைவு காரணமாக சாந்தியின் உயிர் இன்றுபிரிந்தது. சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலமானார்.

நடிகர் கவுண்டமணி, சாந்தியை காதலித்து திருமணம் செய்தார். கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகள் சாந்தியின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருவதோடு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று இரவு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கவுண்டமணியின் வீட்டுக்கு நேரில் சென்றார். வீட்டில் இருந்த கவுண்டமணியை சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார். மனைவி சாந்தியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அதன்பிறகு சாந்தியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் இறுதி சடங்குகள் இன்று காலையில் நடைபெற உள்ளது.