மீண்டும் நடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை: சமந்தா!

மீண்டும் நடிக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள ஹாரர் காமெடி படமான ‘சுபம்’ மூலம் நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். தனது த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இந்த படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு முக்கிய வேடத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவாணி, சரண் பெரி மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இதற்கிடையில், இப்படத்தின் புரமோசனில் பேசிய சமந்தா, நடிப்பதை தவிர்த்து வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எப்போதும் தனக்கு இருந்ததாக கூறினார். அவர் கூறுகையில், “நான் சிறிது காலம் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்திருந்தேன். அப்போது நான் நிறைய யோசித்தேன். என்னால் படங்களில் நடிக்க முடியவில்லை, மீண்டும் நடிக்க முடியுமா? என்று கூட எனக்கு தெரியவில்லை. அப்போதுதான் தயாரிப்பு எண்ணம் எனக்கு வந்தது. நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கிறேன். இந்த அனுபவத்துடன், ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன்” என்றார்.