தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!

இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, தனது ஒரு மாத சம்பளத்தைத் தேசிய பாதுகாப்பு நிதிக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, தனது ஒரு மாத சம்பளத்தைத் தேசிய பாதுகாப்பு நிதிக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பகல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு எதிராக, நமது உண்மையான ஹீரோக்கள், எல்லைகளில் துணிச்சலுடன் செயல்படுவார்கள் என்பதை அறியாமலே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், எனது முதல் சிம்பொனிக்கு ‘வேலியன்ட் (Valiant தைரியத்தையும் துணிச்சலையும் குறிக்கும் சொல்) என்று பெயரிட்டிருக்கிறேன்.

பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்க வும் நம் ஹீரோக்களின் துணிச்சலான முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சி கட்டணம், மற்றும் ஒரு மாத சம்பளத்தை ‘தேசிய பாதுகாப்பு நிதி’க்கு வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.