செப்டம்பர் 18-ம் தேதி ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் கடும் போட்டி நிலவியது. முதலில் ‘சூர்யா 45’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்கள் வெளியாவதாக கூறப்பட்டது. இதில் ‘பைசன்’ மட்டும் தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருந்தது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.
‘DUDE’ படத்தின் திடீர் அறிவிப்பால் மீண்டும் குழப்பம் நிலவியது. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எப்போது வெளியீடு என்ற கேள்வி எழுந்தது. தற்போது செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகும் என்று ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதுவரை தீமா என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்க இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இதனை லலித் குமார் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.