எனக்கு காதல் படங்கள்தான் ரொம்பவே பிடிக்கும். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது. எனவேதான் இன்னமும் காதல் பாடங்கள் இயக்கவில்லை என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் பெரும் தாக்கத்தை சினிமா துறையினரிடமும், ரசிகர்களிடமும் விதைத்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது.
வெற்றிமாறனின் படங்கள் பெரும்பாலும் விமர்சனத்தை சந்திக்காது. ஆனால் வடசென்னை படம் அதற்கு விதி விலக்காக அமைந்தது. பெரும்பாலானோருக்கு அந்தப் படம் பிடித்திருந்தாலும் ஒருதரப்பினரோ; வடசென்னை மக்களை வெற்றிமாறன் மோசமாக சித்தரித்துவிட்டார் என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போதும் அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கு ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.
அவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. படத்தின் முதல் பாகம் எப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இரண்டாவது பாகம் கொஞ்சம் கலவையான விமர்சனத்தைதான் பெற்றது. முக்கியமாக படம் முழுக்க பிரசார தொனி அதிகமாகவே அடித்ததாக பலரும் கூறினார்கள். அதேசமயம் படத்தின் வசனங்கள் அனைத்தும் தரமாக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டவும் தவறவில்லை. நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன.
அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இந்தப் படம் ஒரு மைல் ஸ்டோனாக இருக்கும் என்ற ஆர்வம் சூர்யா மற்றும் வெற்றி ரசிகர்களிடம் இருக்கிறது.
சமூகம் சார்ந்த படங்களை வெற்றிமாறன் இயக்கினாலும் அவர் இயக்கும் காதல் காட்சிகள் அனைத்துமே அருமையாக இருப்பவை. எனவே அவர் எப்போது முழு நீள காதல் படத்தை இயக்குவார் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறார்கள். இந்நிலையில் அதுகுறித்து சமீபத்தி பேசிய வெற்றிமாறன், “ஒரு படத்தின் பணிகளை முடிக்க எத்தனை நாட்களாகும் என்பதை இயக்குநர்தான் தீர்மானிக்க முடியும். அவரைத் தவிர்த்து யாரும் தீர்மானிக்கவும் முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. சமீபத்தில் ஒரு பெண் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்தார். அவரை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன்பு என்னை பார்த்த மாதிரியே இருந்தது. இப்போது சினிமா துறையில் பெண்கள் அதிகரிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு காதல் படங்கள்தான் ரொம்பவே பிடிக்கும். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது. எனவேதான் இன்னமும் காதல் பாடங்கள் இயக்கவில்லை” என்றார்.