நடிகர் சந்தானம் சிக்கலில் சிக்கியுள்ளார். தனது அடுத்த படமான டிடி நெக்ஸ்ட் லெவலில் உள்ள கிஸ்ஸா 47 பாடலில், இறைவன் ஏழுமலையானின் பெயரை அவமதித்ததற்காக ரூ. 100 கோடி கேட்டு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள ஏழுமலையானின் திரு நாமங்களை அனைத்து பக்தர்களும் மிகுந்த பக்தியுடன் உச்சரிக்கின்றனர். இந்நிலையில் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்னும் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் புதிய படத்தில் வரும் கிஸ்ஸா 47 பாடலில், ’ஸ்ரீநிவாசா கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா’ என்னும் வரிகள் சேர்க்கப்பட்டதால், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் மற்றும் ஏழுமலையானை வணங்கும் பக்தர்களும் மிகுந்த கோபமடைந்துள்ளனர். மேலும், கிஸ்ஸா 47 பாடலில் “கோவிந்தா” என்ற வார்த்தைகளை நக்கலாகப் பயன்படுத்தியதற்காக, நடிகர் சந்தானம் மிகுந்த சிக்கலில் உள்ளார்.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் கிஸ்ஸா 47 பாடல் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. இந்தப் படம், வரும் மே 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நேரத்தில் இந்தப் பாடலில், ஏழுமலையானின் சுப்ரபாதம் பாடலில் வரும் சீனிவாசா கோவிந்தா என்னும் பாடலை, கமர்ஷியலான இந்த சினிமாவில் பயன்படுத்தியுள்ளனர். அதுதான், இதுபோன்ற இந்த பெரிய சர்ச்சைக்குக் காரணம்.
திருப்பதி பாஜக தலைவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான பானுபிரகாஷ் ரெட்டி மற்றும் திருப்பதி ஜன சேனா பொறுப்பாளர் கிரண் ராயல் ஆகியோருடன் சேர்ந்து, இதுபோன்ற ஆபாசமான பாடலில் ’கோவிந்தா’ என ஏழுமலையானின் பெயரைப் பயன்படுத்தியதற்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தப் பாடலை உடனடியாக நீக்க வேண்டும் என்று பானு பிரகாஷ் ரெட்டி கோரிக்கை விடுத்தார். மேலும், இதைச் செய்ய முடியாவிட்டால், ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு, நடிகர் சந்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
மேலும் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த கிரண் ராயல் ஏற்கனவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்த சர்ச்சையை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.
நடிகர் சந்தானம் மற்றும் நிஹாரிகா என்டர்டெயிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி அந்த நோட்டீஸில், ‘உடனடியாக கிஸ்ஸா 47 படத்திலிருந்தும் சமூக ஊடகங்களிலிருந்தும் நீக்க வேண்டும். இல்லையென்றால், வெங்கடேஸ்வரா பக்தர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும். அப்படியும் முடியாதபட்சத்தில், வெங்கடேசனை வழிபடும் பக்தர்களின் மனதைக் காயப்படுத்தியதற்காகவும் இந்துக்களின் மனதைக் காயப்படுத்தியதற்காகவும் ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் இதைச் செய்யாவிட்டால் கிரிமினல் வழக்குத் தொடரப்படும்’’ என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், பானுபிரகாஷ் ரெட்டி, இந்தப் பாடல் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதாக ஒரு வீடியோவில் கூறியுள்ளார். அதேபோல், துணிச்சல் இருந்தால் மற்ற மதத்தினரை அவமதிக்கும் பாடல்களைக் கொண்டு வருமாறு அவர் சவால் விடுத்தார்.
கிஸ்ஸா 47 பாடல் ’ஸ்ரீனிவாச கோவிந்தா’ என்ற பெயர்களுடன் தொடங்குகிறது. இந்தப் பாடல் பிப்ரவரி 26ஆம் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இது ஏற்கனவே 93 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த சர்ச்சைக்கு தயாரிப்பாளர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், இதுகுறித்து பேசியிருக்கும் சந்தானம், ‘நான் பெருமாளின் பக்தன். அவர் பெயர் முன்னர் வரவேண்டும் என்பதற்காக தான் வைத்துள்ளேன். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்’ எனப் பேட்டியளித்திருக்கிறார்.