‘தி வெர்டிக்ட்’ படத்தின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பார்த்திபன் மற்றும் நடிகை சுஹாசினியின் பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும், முன்னணி நடிகையுமான வரலட்சுமி ‘தி வெர்டிக்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா சங்கர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சுஹாசினி, சுருதி ஹரிஹரன், வித்யுலேகா, தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘தி வெர்டிக்ட்’ பட டிரெய்லர் விழாவில் நடிகை சுஹாசினி பேசும்போது, “சின்ன வயதில் உங்கள் நடிப்பை பார்த்தேன் என்று பலரும் சொல்லும்போதெல்லாம், ‘அவ்வளவு சீனியர் ஆகிவிட்டோமா?’ என்று எண்ணத்தோன்றும். ஆனால் வயதாகிவிட்டதின் சிறப்பு அமெரிக்காவில் இருக்கும்போது புரிந்தது. அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது, என் ரசிகை ஒருவர் எனக்காக, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சாப்பாடு செய்துகொண்டு வந்தார். அப்போதுதான் என் வயதின் முக்கியத்துவம் புரிந்தது. இங்கே என்னைப் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். அதில் இரண்டு விஷயம் உணர்ந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம் நாம் சரியாகச் செய்ய வேண்டுமே, நாம் ஏதாவது சாதித்திருக்கிறோமா சாதிக்க வேண்டுமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் வரும். இங்கே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் என்னை ஒப்பிட்டார்கள். ஆனால் நான் நினைப்பது அடக்கமாக இருக்க வேண்டும், மேலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து பார்த்திபன் பேசும்போது, ‘எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினிதான். 28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்லமாட்டார்கள். ஆனால், தனது அழகின் மீது திமிரு கொண்டவர் சுஹாசினி. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல். ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டார்.
அப்போது சுஹாசினி எழுந்து, ‘எனக்கு 63 வயதாகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள்’ என்றார். இதையடுத்து, ‘பார்த்தீர்களா, இதுதான் திமிரு’ என்றார் பார்த்திபன். இது கலகலப்பூட்டும் விதமாக அமைந்தது.