‘ஏஐ’-யை கண்டு பயப்படத் தேவையில்லை: கமல்ஹாசன்!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் ‘ஏஐ’ இருக்கப் போகிறது. அது நம்மை மிஞ்சிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை என்று கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இதில் மீண்டும் நடித்திருக்கிறேன். அப்போது இருந்ததை விட இருவருமே இப்போது அனுபவம் வாய்ந்தவர்களாக மாறியிருக்கிறோம். ‘நாயகன்’ படத்தில் நடித்த கமல்ஹாசனும் அதை இயக்கிய மணிரத்னமும் இப்போது இல்லை. ஒரே இடத்தில் நிற்காமல் நகர்ந்து வந்துவிட்டோம் என்பதே பெருமையாக இருக்கிறது. எந்த டைரக்‌ஷனுக்கு போக வேண்டும் என்று நினைத்தாரோ அந்த இடத்துக்கு மணிரத்னம் இப்போது வந்திருக்கிறார். நாங்கள் ஆரம்ப காலத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் எடுக்கப் போவதாகச் சொன்ன சினிமாவுக்கும் எடுத்த சினிமாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ‘நாயகன்’ படத்தின் ஞாபகமே வராமல் இதை இயக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முயற்சி. அதை செய்திருக்கிறோம் என நினைக்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ளலாம் என்றுதான் அமெரிக்கா சென்றேன். அது என்னைவிட, நம்மைவிட ரொம்ப பெரியது. அதைப் புரிந்துகொள்ளாமல் அதில் கை வைக்கக் கூடாது. அதைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், சினிமாவை பொறுத்தவரை அது இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. அது பரந்த பகுதி. நம் அனைவரின் வாழ்க்கையிலும் ‘ஏஐ’ இருக்கப் போகிறது. அது நம்மை மிஞ்சிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.