மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இயக்குநர் ராம் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் இயக்குநர்கள் ராம் மற்றும் வெற்றிமாறன் இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் பேசிய ராம், நா.முத்துக்குமாரின் கவிதையை நீங்கள் படமாக எடுக்க வேண்டும் என்று வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை படமாக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதில் சூரியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
