சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கூலி திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி, விஜயின் மாஸ்டர், கமலஹாசனின் விக்ரம், விஜய்யின் லியோன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். சிறிய இடைவேளையில் இந்தியா முழுவதும் பேசப்படும் இயக்குனராக மாறிய லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் செய்யப் போகிறார் என்ற தகவல் இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்சும் இணைந்து கொள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியது. பான் இந்தியா திரைப்படமாக கூலி அறிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துடன் பல்வேறு மொழிகளின் சூப்பர் ஸ்டார்களும் இணைந்தனர். பாலிவுட்டில் இருந்து ஆமீர்கான், கன்னடத்தில் உபேந்திரா, தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் சோபின் என பலர் இணைந்தனர். மேலும் சத்யராஜ். ஸ்ருதிஹாசன் ஆகியோரும் படத்தில் இணைந்தனர்.
வழக்கம்போல் அனிருத் இசை அமைக்க கடந்த சில தினங்களாக படத்தின் பாடல்கள் டீசர் ட்ரைலர் ஆகியவை வெளியானது. படத்தில இடம்பெற்ற அரங்கம் அதிரட்டுமே, மோனிகா பாடல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ட்ரெய்லரும் வெளியானது. வழக்கம்போல படத்தின் மேக்கிங்கில் மாஸ் காட்டி இருந்தார் லோகேஷ். மேலும் அனிருத்தின் பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகிறது. தற்போது தியேட்டர்களில் புக்கிங் ஆரம்பித்து இருக்கும் நிலையில் விடுமுறை தினம் என்பதால் டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்து வருகின்றன. ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களை இடையில் இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கூலி படத்தை ஆன்லைன் மற்றும் சட்ட விரோத இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அதனை சமூக வலைதளங்களிலும் சட்டவிரோத இணையதளங்களிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
