வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை: பிரகாஷ்ராஜ்!

“நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை” என நடிகர் பிரகாஷ் ராஜ், தலைமை தேர்தல் ஆணையருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து நேற்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பீகாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ தொடங்கியுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் நேற்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து பின்வாங்காது. வாக்கு திருட்டு போன்ற முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்.” என்றார். மேலும், “மின்னணு வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை, இது வாக்காளர் தனியுரிமையை மீறுவதற்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் 2019 இல் கூறியது. சில நாட்களுக்கு முன்பு பல வாக்காளர்களின் புகைப்படங்கள் அவர்களின் அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிடப்பட்டதை பார்த்தோம். தேர்தல் ஆணையம் எந்த வாக்காளரின் சிசிடிவி காட்சிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? மக்களவைத் தேர்தலுக்காக 1 கோடிக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் லெவல் முகவர்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பணிபுரிந்தனர். இவ்வளவு வெளிப்படையான செயல்முறையுடன், இவ்வளவு மக்கள் முன்னிலையில் யாராவது வாக்குகளைத் திருட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையருக்கு கேள்வி எழுப்பியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் அந்தப் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை” எனத் தெரிவித்துள்ளார்.