ரஜினிகாந்தை திடீரென சந்தித்த நயினார் நாகேந்திரன்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு இன்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார்.

தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் சென்னையில் இன்று காலையில் நடிகர் ரஜினிகாந்தை அவர் சந்தித்து பேசி உள்ளார். நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கே சென்று நயினார் நாகேந்திரன் இந்த சந்திப்பை நடத்தி உள்ளார். ரஜினிகாந்த் கையில் விநாயகர் சிலையை வழங்கி அவர் சிறிது நேரம் கலந்துரையாடி உள்ளார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்தது.

இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு தொடர்பான போட்டோவை நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதோடு, அதன் பின்னணி பற்றி விளக்கி இருந்தார். நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவின் பத்ம விபூசண் தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன். அவர் வாழ்த்துகளை பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்! அரை நூற்றாண்டு காலம் இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்! அண்ணன் ரஜினிகாந்த் இன்னும் பல நூற்றாண்டு காலம் திரை உலகை ஆண்டு தாயகப் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து அவரை வாழ்த்தி வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தை 1975ம் ஆண்டு தொடங்கினார். தற்போது அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் இன்று காலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்துக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.