இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமாவாக காட்டப்பட்டது: சிரஞ்சீவி!

இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமாவாக காட்டப்பட்டது. மற்ற வட்டார மொழிப் படங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பேசினார்.

இந்தி தேசிய மொழியா என்பது குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய காணொலி தற்போது வைரலாகி வருகிறது. அதில் இந்திய சினிமா என்றால் வெறுமனே இந்தி சினிமாதான் என அடையாளப்படுத்தியபோது மிகவும் அவமானமாக தான் உணர்ந்ததாக 1988-ல் நடந்த அனுபவம் குறித்துப் பேசினார்.

“1988-ல் ருத்ரவீணா என்கிற படத்தை நாகபாபு உடன் இணைந்து உருவாக்கினேன். அந்த படம் மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் என்கிற விருதை வென்றது. அந்த விருது விழாவுக்காக டெல்லி சென்றிருந்தோம். விருது விழாவுக்கு முன்பு டீ பார்ட்டியின்போது சுற்றிலும் சுவர்களில் இந்திய சினிமாவின் பெருமையைப் பேசும் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. ப்ரித்விராஜ் கபூர், ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா இவர்களின் படங்கள் சுற்றிலும் இருந்தன. அவர்களைப் பற்றிய தகவல்களும் நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டிருந்தன. இந்தி திரையுலகைப் புகழும் விதமாக அவை இருந்தன.

தென்னிந்திய சினிமா பற்றியும் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் அங்கு வெறுமனே எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடனமாடும் படம் ஒன்றை மட்டும் வைத்து தென்னிந்திய சினிமா என எழுதியிருந்தார்கள். பிரேம் நசீர் இந்திய சினிமாவில் அதிகப்படங்கள் கதாநாயகனாக நடித்தவர் அவர் படம் இருந்தது. அவ்வளவுதான். டாக்டர் ராஜ்குமார், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், சிவாஜி கணேசன் இவர்களெல்லாம் நமக்கு தெய்வங்கள் போன்றவர்கள். இவர்களின் படம் இடம்பெறவில்லை. இது என்னை கூனிக்குறுகச் செய்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமாவாகக் காட்டப்பட்டது. மற்ற வட்டார மொழிப் படங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. சினிமாவில் அவர்களின் பங்கு பற்றி குறிப்பிடப்படவில்லை.

ஆனால், தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு நான் பெருமையாக உணர்கிறேன். தெலுங்கு சினிமா தடைகளை உடைத்து இந்திய சினிமாவின் முகமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லோரும் நமது வெற்றியைப் பார்த்து வியக்கிறார்கள். நமது படைப்பின் நேர்த்தியால், ஒருவித தீண்டாமையைக் கடந்திருக்கிறோம். பாகுபலி, பாகுபலி 2, RRR உள்ளிட்ட படங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன்” எனப் பேசி இருக்கிறார். அதே மேடையில் ராஜமௌலியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.