நடிகை மும்தாஜ் வீட்டில் இருந்த சிறுமி உட்பட இருவர் மீட்பு!

நடிகை மும்தாஜ் வீட்டில் ஆறு ஆண்டுகளாக விருப்பமின்றி பணியாற்றிய வட மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட இரண்டு பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில்ஒப்படைத்தனர்.

மோனிஷா என் மோனலிசா மற்றும் குஷிஉள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மும்தாஜ் (41). இவர் அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள ‘எச்’ பிளாக் பகுதியில் சகோதரனுடன் வசிக்கிறார். இவரது வீட்டில் வீட்டு வேலைகள் செய்யும் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியேறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது சொந்த ஊருக்கு செல்ல விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்ணா நகர் போலீசார் அப்பெண்னை மீட்டு காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பீகாரை சேர்ந்த 19 வயது இளம்பெண் என்பதும், இவரும் இவரது 17 வயது தங்கையும் கடந்த ஆறு ஆண்டுகளாக மும்தாஜ் வீட்டில் வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை போலீசார் மீட்டு ஷெனாய் நகரில் உள்ள அரசு காப்பகத்தில்ஒப்படைத்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போலீசார் விசாரிக்கின்றனர். சிறுமியை வேலைக்கு சேர்த்தது உறுதி செய்யப்பட்டதால் மும்தாஜ் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம்.