தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை: கமல்ஹாசன்!

இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை, அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் இதற்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தாய் மொழியை விட்டுவிடாதீங்க. இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை, ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை.

4 ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா. அதற்கு நான் காரணமல்ல நீங்கள் தான். யாருமே இங்கு முழு நேர அரசியல்வாதிகள் அல்ல. முதன்முதலில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற பொழுது டி.ஆர். என்னை தேடி வந்து கதறி கதறி அழுதார், நீங்கள் எப்படி இப்படி பண்ணலாம்னு கேட்டு அழுது என் சட்டை நனைந்துபோனது, என் முடிவுக்கு நான் உட்பட பலரும் வருத்தப்பட்டார்கள். அரசியல் களத்தில் புதிய நாகரீகத்தை வளர்க்க அரசியல் வந்துள்ளேன். இப்ப வரவில்லை என்றால் எப்போது? என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம் மூவர் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன். தாத்தாவுடன் தொடங்கிய பயணம் தற்போது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறார்களா என்று கேட்டனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர். அது எப்படி என்று கேட்கலாம். ஏன் ரஜினிகாந்தும் நானும் போட்டியாளர்களாக இருந்துகொண்டு நண்பர்களாக இல்லையா? அதுபோலதான். இவ்வாறு அவர் கூறினார்.